அரகலய தாக்குதல் பின்னணியில் சிக்கியுள்ள முன்னாள் எம்.பிக்கள்!
2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் உள்ள “கோட்டா கோ கம” போராட்ட களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உட்பட 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (04.11.2025) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் காவல்துறை உட்பட பிரதிவாதிகள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி போராட்டக்காரர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் நேற்று (04.11.2025) மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உண்மைகள் வெளிப்பட்டன.
நீதிமன்ற வழக்கு
சம்பவம் நடந்த நேரத்தில் போதுமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீர் பீரங்கித் துப்பாக்கிகள் காணப்பட்ட போதிலும், அவர்கள் முறையாகப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்தரப்பத்திர் களத்தில் அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது கடமையைச் செய்யத் தவறியதற்காக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், மனுக்களில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடரப்படாது என்பதால், அவர்களுக்கு எதிரான இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தொடர வேண்டாம் என இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்