மற்றுமொரு கொடுமை மலத்தை உண்ண கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர்கள்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஓய்வதற்குள் மற்றொரு சம்பவம் அங்கு இடம்பெற்றுள்ளது.
அங்கு பாலியல் வன்புணர்வு புரிந்தார்கள் என பிடிக்கப்பட்ட இரண்டு பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் கட்டாயப்படுத்தி மலம் உண்ண கொடுக்கப்பட்ட கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போபாலை அடுத்த சிவபுரியைச் சேர்ந்த இளைஞர்களான ஜாடவ் (Jatav) என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கேவாட் (Kewat) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
செருப்பு மாலை

இதுமட்டுமல்லாது அவர்களை வலுகட்டாயமாக அவமானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நர்வார் பகுதியின் வார்காடி என்ற இடத்தில் ஜூன் 30 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞரின் சகோதரர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பேரில் ஷிவ்புரி மாவட்ட காவல்துறை, உள்ளூர் வாசிகள் ஆறு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது.
ஆதாரமற்ற பாலியல் வன்கொடுமை
இவர்களிடம் விசாரணை செய்ததில், இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையானது ஆதாரமற்றது எனவும், சொத்து தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இவ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “இந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட கொடுமையானது, மனித குலத்தை அவமானப்படுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இனியும் இதுபோன்ற செயல்களை செய்ய அனுமதிக்கக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (NSA) செயல்படுத்தவும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட அவர்களின் கட்டடங்களை இடித்துத் தள்ளவும் உத்தரவிட்டுள்ளது” என்றார்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்