அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: சூரிச் விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்து
சூரிச் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் பர்கன்பிராக் மலைப்பகுதிக்கு மேல் அவசர அவசரமாக விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தாமதம்
கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவைச் சுவிட்சர்லாந்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான ஸ்கைகைடு தனது ரேடார் அமைப்பில் இணைத்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தடங்கலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் சூரிச் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்களும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 14 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 60 இற்கும் மேற்பட்ட விமானங்கள் கடுமையான தாமதத்தை எதிர்கொண்டுள்ளன.
தற்போது இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை முழுமையாகச் சரிசெய்யப்பட்டு விமானச் சேவைகள் வழமை போல் சீராக இயங்கி வருவதாகவும் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் ஸ்கைகைடு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |