அமெரிக்க இடைத் தேர்தல் - காங்கிரஸ் யார் கட்டுப்பாட்டில்...! முடிவுகள் அறிவிப்பு
அமெரிக்காவின் இடைத் தேர்தலில் மில்லியன் கணக்கான மக்கள் வாக்களித்துள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் பிரதிநிதிகள் சபையின் அதிகாரம் குடியரசுக் கட்சியினர் வசம் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதுடன், செனட் சபையில் அதிகாரத்திற்கு கடும் போட்டி நிலவுகின்றது.
தேர்தல் முடிவுகள்
இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் எதிர்கால வடிவத்தை தீர்மானிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிகரித்துள்ள விலையேற்றம், கருக்கலைப்புக் கொள்கை ஆகியன முக்கிய பேசுபொருளான விடயங்களாக காணப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் 10 வாக்காளர்களில் மூவர், அதிகரிக்கும் பணவீக்கம் முக்கியமானது எனக் கருத்து கூறியுள்ளனர்.
கருக்கலைப்பு விடயம் மிகவும் முக்கியமானது என 10 வாக்காளர்களில் மூவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க காங்கிரஸ் யார் கட்டுப்பாட்டில்?
இந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமெரிக்க காங்கிரஸ்சை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு சபைகளிலும் ஒன்றின் அதிகாரத்தை இழக்கும் பட்சத்திலும் அது அதிபர் ஜோ பைடனுக்கு நெருக்கடியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு 218 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை
தற்போது ஜனநாயகக் கட்சியினர் வசம் 220 ஆசனங்களும் குடியரசுக் கட்சியினர் வசம் 212 ஆசனங்களும் காணப்படும் நிலையில், ஆறு ஆசனங்களை கூடுதலாக பெறும் பட்சத்தில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வார்கள்.
குறிப்பாக பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்ஸி பெலோஸி மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
