அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சிஐடியில் முறைப்பாடு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது சுயவிபரங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (24) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அப்பியாச புத்தகங்கள் கொள்வனவு
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ”எனது சுயவிபரங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் இந்த நிதி மோசடிகளை செய்துள்ளனர்.
குறிப்பாக என்னைப் போன்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வாட்ஸ்அப் மூலம் இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதற்காக அவர்களுடன் கைத்தொலைபேசி மூலம் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி எனது குரலிலும் உரையாடியுள்ளனர்.
சமூக நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்ளவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு தேவையான அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதாகவும் தெரிவித்து இவர்களிடம் நன்கொடை சேகரித்துள்ளனர். மேலும் பணத்தை வைப்பு செய்வதற்காக சில வங்கி கணக்கு இலக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடான சந்திப்பு எனும் தலைப்பில் இணையவழி கூட்டம் (Zoom) ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
நிதி திரட்டுதல்
அதற்கான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு எனது கையொப்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாட்டு மக்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இவ்வாறான நிதி மோசடிகளில் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நானோ அல்லது எமது கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்பு கொண்டு நிதி திரட்ட மாட்டோம். அவ்வாறு நாம் நிதி திரட்டுவோமாயின் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகள் ஊடாகவே அதனை செய்வோம்.
இந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளின் விபரங்களை நான் சிஐடிக்கு ஒப்படைத்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு மோசடியாளர்களை கைது செய்யுமாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.
இந்த மோசடிகளை மேற்கொள்பவர்கள் எம்மை அறிந்தவர்களாக இருக்கலாம் அல்லது நாம் அறிந்திராதவராக இருக்கலாம். ஆனால் எவராயினும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |