நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்
யாழ். மாவட்டத்தின் வைத்தியத் துறை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலுப்பெற்று தற்போது அமைதி பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாய் உள்ளது.
இதற்கு பிரதானமாக, சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முறைகேடுகளும், குறித்த வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதனின் முன்வருகையும் பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ''திருநீலகண்டன் பாம்புக்கடிக்கு உள்ளான எனது தந்தையை சிகிசிச்சைக்காக கொண்டுவந்தபொழுது, வைத்தியர்கள் எவரும் இருக்க வில்லை எனவும், இதனை தற்போதய பதில் வைத்திய அத்தியட்சகர் கவனமெடுக்கவும் என வைத்தியர் ரஜீவை மேற்கோள் காட்டி முகப்புத்தக பதிவொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்ட தரப்புக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி விளக்கம் கோரப்பட்டது.
இதன்போது, தனது தந்தையின் மருத்துவ தேவைக்காக வந்தபொழுது வைத்தியர்களோ, சக ஊழியர்களோ வைத்தியசாலையில் இல்லை எனவும், இதன்போது வைத்தியசாலையில் ஊழியர்கள் எவரும் இருப்பதை உறுதிசெய்துக்கொள்ள வாகனத்தின் ஒளியை எழுப்பியதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர், நீங்கள் வருகைதந்த வாகனத்தின் சாரதிக்கு, சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா? வைத்தியசாலைக்கு முன்னாள் ஒலி எழுப்பக்கூடாது என்பது சரியா? என கேள்வி எழுப்புகின்றார்?
இதன் பின்னர் பாம்பு கடிக்கு இலக்கணவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றதாக பாதிக்கப்பட்டவர் கூறுகின்றார்.
இங்கு தவறு செய்தவர் யார்? வைத்தியதேவைக்கு நோயாளர்கள் வரும்வேளையில் ஊழியர்கள் இல்லாமை நிர்வாகத்தில் உள்ளவர்களின் தவறா? அல்லது, வைத்தியசாலைக்குள் எவரேனும் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்ய ஒலி எழுப்பிய சாரதியின் தவறா?
இதன்போது பொறுப்புக்கூறவேண்டிய வைத்தியத்துறைக்கு விசாரணை அறிக்கை மாத்திரம் முடிவென்றால், மருத்துவ தேவைக்காக வரும் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்போவது யார்?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |