தவறான முகாமைத்துவமே நாட்டின் சிக்கலுக்கு காரணம் - ராஜபக்ச அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவமே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (11) ஊடக சந்திப்பை நடத்தியிருந்த நிலையில், இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“சுதந்திரத்திற்கு பின்னர் நாடு இத்தகைய ஒரு அழிவினை எப்போதும் சந்தித்திருக்கவில்லை. ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது.
வட்டிக்கு பணம் வாங்குவதையும், நாட்டின் சொத்துக்களை விற்பதையும் நிறுத்துமாறு அரசாங்கத்திடம் நாம் பலமுறை வலியுறுத்தியிருந்தோம். ஆனாலும் அவர்கள் இதனை செவிமடுக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி ஒத்துழைப்பைப் பெறுமாறு நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.
அரசாங்கம் உலக நாடுகளிடமிருந்து அதிக வட்டிக்கு பணத்தைப் பெற்றுள்ளமையினால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்” என்றார்.