காணாமல் போன விமானப்படையின் வெடிபொருட்கள்! நால்வரைக் கைது செய்த பொலிஸார்
வெலிசர விமானப்படை வெடிமருந்து சேமிப்பு நிலையத்திலிருந்து வெடி பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களில் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருங்கல் குவாரிகளில் வெடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களே நிலையத்தில் இருந்து திருடப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஒழுங்கு பிரிவின் இயக்குநர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னர் கடற்படை மற்றும் விமானப் படையின் உறுப்பினர்கள் இருவரையும், இரு வெளிநாட்டவர்களையும் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 70 கிலோ கிராம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.