காணாமல்போன ஜேவிபி உறுப்பினர்கள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ரோஹன விஜேவீர (Rohana Wijeweera) உட்பட உயிரிழந்த ஜேவிபி (JVP) உறுப்பினர்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னிலை சோசலிசக் கட்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) எழுத்து மூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி உயிர் நீத்த ஜேவிபி உறுப்பினர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த கோரிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரோஹன விஜேவீரவின் மரணம்
முன்னதாக அரச பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் சட்டவிரோத கொலைகளின் பின்னணியில் உள்ள உண்மைகளையும் வெளிப்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்கள் ஊடாகவும் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ஜேவிபியின் தலைவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள நிலையில், ரோஹன விஜேவீரவின் மரணம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விரிவான விசாரணைக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |