ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட வேண்டும் எனக் கோரிக்கை
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் விளிம்பில் இருந்து மையம் நோக்கியதாக கலந்துரையாட வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அவல நிலையை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வவுனியாவில் ஆயிரத்து 685ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்னும் வருடங்கள் காத்திருப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பறிபோய்விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

