நாங்கள் அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை - ஒ.எம்.பி அலுவலகம் மிரட்டுவதாக குற்றச்சாட்டு!
மூன்று தடவை அறிவித்தும் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை, நான்காவது தடவை அறிவித்தும் வரவில்லை என்றால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி ஓ.எம்.பி யினால் மிரட்டல் விடுக்கப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கட்டடத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இதனைத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, செயலாளர் பிராபாகரன் றஞ்சனா, உப செயலாளர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஒ.எம்.பி தேவையில்லை
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,
"ஒ.எம்.பி அலுவலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் எட்டு மாவட்ட சங்க தலைமையினாலும் உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒ.எம்.பி அலுவலகம் நேற்று முன்தினத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றார்கள்.
பிள்ளைகளையும், வங்கிக் கணக்கு இலக்கமும் கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளார்கள். ஒ.எம்.பி அலுவலத்தின் நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றார்கள்.
தமிழ் மக்களை மிரட்டி அவர்கள் வேலை செய்யத் தேவையில்லை, ஒ.எம்.பி அலுவலகத்தினால் அவர்களுக்கு நிறைய இலாபம் இருக்கின்றபடியால் தொடர்ச்சியாக எங்களுக்கு அழுத்தம் தருகின்றார்கள்.
மூன்று தடவை அறிவித்தும் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை, நான்காவது தடவை அறிவித்தும் வரவில்லை என்றால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி வருகின்றார்கள்.
அந்த சட்ட நவடிக்கை என்ன என்பது எங்களுக்கு பகிரங்கமாக தெரிய வேண்டிய தேவை இருக்கின்றது.
எங்களை பயமுறுத்தி விபரத்தினை எடுக்க முயல்கின்ற அரசாங்கமும் தேவையில்லை, ஒ.எம்.பியும் தேவையில்லை, வெளிநாட்டுக்காரர்களின் அழுத்தமும் தேவையில்லை, நாங்கள் எங்கள் உயிர் இருக்கும் மட்டும் போராடுவோம்.
புதிய சட்டம்
எங்கள் போராட்டத்தினை அடக்க புதிய சட்டத்தினையும் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை எடுத்து, இன்னொரு சட்டத்தினை கொண்டு வந்து 24 மணித்தியாலங்கள் எதுவும் இல்லாமல் வைத்து விசாரணை செய்யலாம், எங்களை துன்புறுத்தலாம், எங்களை மிரட்டி கைது செய்யலாம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த மாதம் வந்துகொண்டிருக்கும் போது எங்களுக்கு இவ்வாறான மிரட்டல்களும் ஆபத்துக்களும் வருகின்றது.
எதிர்வரும் 18 ஆம் திகதி இனப்படுகொலை செய்த நாட்கள் நெருங்கிவரும் நேரம் ஒ.எம்.பி அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வெளியேற வேண்டும்.
உங்கள் கைகளில் கையளித்த எங்கள் உறவுகளை கேட்கின்றோம், இந்த அரசாங்கம் எங்களை வைத்து பிழைக்காமல் வேறு வழியிருந்தால் பாருங்கள்.
காணாமல் போன உறவுகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நீதி வழங்க வேண்டும் என்று இன்று வரை போராடிவருகின்றோம்.
இந்த நீதியினை தவிர எவர் வந்தாலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்." என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
