13 வருடங்கள் கடந்தும் ஆறாத வடு - ஆறு வருடங்களாகியும் கிடைக்காத நீதி!
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி யுத்த நினைவு சின்னம் வரை சென்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் 6 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இற்றை வரைக்கும் வெளிப்படுத்தப்படும் உண்மை

போராட்டம் ஆரம்பித்த இடமான கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இன்றைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, டிப்போ சந்தியை சென்றடைந்தது.
அங்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இதுவரை எமக்கான நீதி எதுவும் கிடைக்கவில்லை. ஐ.நாவின் 36வது கூட்டத்தொடரிலிருந்து இற்றவரைக்கும் எமது போராட்டத்தின் உண்மைத்தன்மைகளை தெரிவித்துக் கொண்டு வருகின்றோம்.
கிடைக்காத நீதி

உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்திற்கு இலங்கை அரசினால் தீர்வு வழங்க முடியாது. இதுவரை இலங்கை அரசால் நிறுவப்பட்ட 12 ஆணைக்கு குழுக்களுடன் பேசினோம். நீதி எமக்கு கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
