அநுர அரசில் தமிழ் மக்களுக்கான தீர்வில்லை : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்
அநுர (Anura)அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் இல்லை என திருகோணமலை (Trincomalee) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Human Rights Commission) பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவி செபஸ்டியன் தேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் தினம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 15 வருட காலமாக ஏமாற்றப்பட்டு வருகிறோம். இந்த மனித உரிமைகள் தினம் எதற்கு. இந்த அரசாங்கம் வருகையின் பின் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகிறோம் ஏன் இதனை செய்கிறார்கள்.
சர்வதேச நீதிப் பொறி முறை தான் எமக்கு தேவை உள்நாட்டு பொறிமுறை என்பது வெறும் கண்துடைப்பு. எனவே தீர்வினை பெற்றுத் தரும் வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும். இந்த அரசாங்கம் அவர் சார்ந்த சமூகத்தையே பார்க்கின்றனர். தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் இல்லை” என தெரிவித்தார்.
முறையான நீதி விசாரணை
மேலும் “நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, உங்கள் இராணுவத்தை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் போனார்கள்?“ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் “வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், மனித உரிமைகள் இல்லாத நேரத்தில் மனித உரிமைகள் தினம் எதற்கு ,சர்வதேச நீதி வேண்டும், வெள்ளைவானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே, வேலைக்கு சென்ற பாடசாலை சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே” போன்ற கோசங்களையும் எழுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |