ராஜிதவின் முன் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னைப் பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் (Rajitha Senaratne) தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு ஒப்படைத்து அரசுக்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.
மீள் பரிசீலனை
ஆனால், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த முன் பிணை மனுவைக் கடந்த 18 ஆம் திகதி நிராகரித்தது.
தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள் பரிசீலனை செய்து தன்னைப் பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திகா காலிங்கவம்ச முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவைக் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி நிராகரித்திருந்தார்.
மனு தொடர்பில் அறிக்கை
ஆனால், இந்த முன் பிணை மனுவை நிராகரிப்பதற்கான சாட்சியங்களை நீதிவான் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறினார்.
இதனைக் கருத்தில்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திகா காலிங்கவம்ச, இந்த மனு தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கோரி உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
