ஆட்சி மாற்றத்திற்கு துணை போனாரா சவேந்திரசில்வா -வெடித்தது சர்ச்சை
2022ல் ‘அரகலயா’ அரசுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் இலங்கையில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதிக்கு ஜெனரல் சவேந்திர சில்வா ஆதரவளித்ததாக, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு இன்று முற்றாக நிராகரித்துள்ளது.
மே 09, 2022 அன்று நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டம் அப்போதைய நிறைவேற்று அதிபர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களை அதிபர் மாளிகைக்குள் வைத்து படுகொலை செய்வதாகவும், ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்திய விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நிகழ்வொன்றில் உரையாற்றிய எம்.பி வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்
தென் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை கூட்டம் 07 ஜூலை 2022 அன்று இந்தியாவில் நடைபெற்றது.
அப்போதைய இலங்கை அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்புதலின் கீழ், ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டத்தில் பங்கேற்றார் என்று பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியது.
விமலின் கூற்று அடிப்படையற்றது
இதன்படி, எம்.பி.யின் மேற்கூறிய கூற்று அடிப்படையற்றது என்றும், ஜெனரல் சில்வா 2022 ஜூலையில் அப்போதைய அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
