உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி
உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான இந்தியாவிலுள்ள சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் விளங்குகின்றது. இங்கு உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த தலைநகரில் வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் செய்தல் என்பவற்றில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
70 இலட்சத்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு
இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயற்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 இலட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆக காணப்படுகின்றது.
பென்டகனை விட பெரியது
டில்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளதுடன் இதற்கான மொத்த செலவு 3 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகின்றது.
இதேவேளை உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |