கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரி தலைமறைவு - விசாரணையில் அம்பலம்
கெக்கிரவ பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் குழுவாக இணைந்து பண கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காவல்துறை அதிகாரி உட்பட நால்வரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹலவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த சந்தேகநபரான காவல்துறை அதிகாரி மேலும் 04 நபர்களுடன் இணைந்து இந்த பண கொள்ளையை மேற்கொண்டுள்ளார்.
காவல்துறையினர் கைது
அண்மையில் குறித்த சந்தேகநபர்கள் தமது காவல்துறை பகுதிக்கு வந்து சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாரவூர்தியை நிறுத்தி அதிலிருந்த 30 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கெக்கிரவ கிரனேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி விக்கிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஹலவத்த காவல் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஆவர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை உந்துருளி ஒன்றுடன் மகுலுகஸ்வெவ காவல்துறையினர் கைது செய்து கிரநேகம காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
30 இலட்சம் ரூபாவை கொள்ளை
அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த காவல்துறை அதிகாரியின் செயல் அம்பலமாகியுள்ளது.
குறித்த அதிகாரி கொள்ளை கும்பலுடன் இணைந்து ஆள்நடமாட்டமில்லா பகுதிகளில் போக்குவரத்து கடமையைச் செய்கின்றோம் என்ற போர்வையில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இடம்பெற்ற 30 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த சம்பவமும் அவ்வாறே நடந்துள்ளது. அன்றைய தினம் உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் கலேவெல பிரதேசத்தில் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை கிரனேகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆள்நடமாட்டமில்லா இடத்தில் நிறுத்தி அதில் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறி சோதனையிட்டுள்ளனர்.
பணம் திருட்டு
அப்போது மர்மநபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். தப்பி ஓடிய உந்துருளியில் பயணித்த ஒருவரை பாரவூர்தி சாரதி மடக்கிப் பிடித்து, சுற்றுவட்டார மக்களின் உதவியுடன் மகுலுகஸ்வெவ காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மகுலுகஸ்வெவ காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
