குற்றமிழைத்த பிக்குகள் தாமாக காவியுடையை களைய வேண்டும்! பொன்சேகா அறிவுரை
பிக்கு ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தாமாகவே முன்வந்து துறவற ஆடையைக் களைந்து ஒப்படைக்க வேண்டும். சிறைக்குள் துறவற ஆடை அணிந்திருப்பது அந்த ஆடையை அவமதிப்பதாகவே அமையும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஒவ்வொரு மதத்துக்கும் சட்டக் கட்டமைப்புகள் இருந்தாலும் நாட்டிலுள்ள பொதுச் சட்டமே மேலானது; அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது,
அனைவரும் பொதுச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும்
“நாட்டில் நடைமுறையில் உள்ள பொதுச் சட்டமே ஏனைய சட்டங்களைவிடவும் மேலானது. ஒவ்வொரு மதத்துக்கும் வெவ்வேறான சட்ட நடைமுறைகள் இருக்கலாம். ஆனால் அனைத்துப் பிரஜைகளும், மதத் தலைவர்களும் பொதுச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம். சட்டத்துக்கு மேலானவர்கள் என எவரும் இல்லை. பிக்கு ஒருவர் துறவற ஆடை அணிந்திருந்தால் அந்தத் துறவற ஆடைக்கென மதிப்பு உள்ளது.
காவியுடை அணிந்தவர் சிறை சென்றால் செய்யவேண்டிய வேலை
துறவற ஆடை அணிந்திருப்பவர் வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட நாற்காலியிலேயே அமர்வார். சிறைக் கைதியானால் கூலி வேலை செய்ய நேரிடும், உணவுக்கு வரிசையில் நிற்க வேண்டி வரும், சக கைதிகளின் கழிப்பறையைக் கூடச் சுத்தப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். துறவற ஆடையில் அதனைச் செய்தால் அது அந்த ஆடைக்குச் செய்யும் அவமதிப்பாக இருக்கும்.

எனவே, பிக்கு ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தாமாகவே முன்வந்து துறவற ஆடையைக் களைய வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பின்னர் விடுதலையானால் அவருக்குத் துறவற ஆடையை வழங்குவதா இல்லையா என்பது பற்றி மத ரீதியில் முடிவுகளை எடுக்க முடியும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |