வெடுக்குநாறி மலை விவகாரம்! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் ஆலய நிர்வாகத்தினர்
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சட்டத்தரணி ஊடாக வவுனியா நீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியா வடக்கு, ஓலுமடு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொல்பொருட் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் அங்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சிவராத்திரி விரதம்
இந்நிலையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபய திஸ்ஸ தேரர், சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் உள்ளிட்ட குழுவினர் இராணுவ பாதுகாப்புடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டு இருந்தனர்.

எதிர்வரும் 8 ஆம் திகதி சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் குருந்தூர் மலை விகாராதிபதி சமூக வலைத்தளத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி பௌத்த இடம் நெடுங்கேணியில் ஆக்கிரமிக்கபடவுள்ளது. அதனை பாதுக்காக அணிதிரள்வோம் என பதிவு செய்துள்ளார்.
நீதிமன்றில் அனுமதி
ஆனால், ஆலய நிர்வாகத்தினர் வழமை போன்று சிவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், வெளிச்சத்திற்காக மின்பிறப்பாக்கி பயன்படுத்துவதாக இருந்தால் நீதிமன்றில் அனுமதியைப் பெறுமாறு நெடுங்கேணி காவல்துறையினர் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் ஆலய நிர்வாகத்தினர் மின்பிறப்பாக்கி பயன்படுத்த அனுமதி கோரி சட்டத்தரணி ஊடாக கடந்த வியாழக்கிழமை மன்றின் கனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் திங்கள் கிழமை முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்