இந்தியாவை உலுக்க தயாராகும் மொந்தா புயல்! இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இலங்கையின் வடகிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
குறித்த புயலுக்கு மொந்தா(Cyclone Montha) என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24, 10. 2025) மாலை 5.00 மணி நிலவரப்படி, புயலானது மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு
முன்னறிவிப்புகளின்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகி, இறுதியில் ஒக்டோபர் 27 ஆம் திகதிக்குள் ஒரு சூறாவளியதக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, 05N–18N மற்றும் 80E–95E எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களை எச்சரித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும் என்றும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு கடற்பரப்பு
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறித்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் திகதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |