இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31.07.2026) காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை
அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளது.
அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |