மயிலத்தமடு முன்னெடுக்கப்படும் இராணுவப் பயிற்சிகள்: பண்ணையாளர்கள் அதிருப்தி
மயிலத்தமடு பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் காட்டுயானைகளின் நடமாட்டம் காரணமாக, தங்களின் கால்நடை வளர்ப்புத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்துப் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில்,
மழையையும் பொருட்படுத்தாது இரவு முழுவதும் கஷ்டப்பட்டு பண்ணையாளர்கள் ஒன்று திரட்டி அடைத்து வைக்கும் கால்நடைகள், இராணுவப் பயிற்சியின் போது ஏற்படும் சத்தங்களினாலும், யானைகளின் நடமாட்டத்தினாலும் மிரண்டு காடுகளுக்குள் சிதறி ஓடுகின்றன.
இவ்வாறு மிரண்டு ஓடும் நூற்றுக்கணக்கான மாடுகள், அருகில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், பண்ணையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே தேவையற்ற முரண்பாடுகளும் மோதல்களும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு இராணுவத்தினர் வந்து செல்லும் பூட்ஸ் காலடித் தடங்கள் மற்றும் வாகனத் தடங்களை ஆதாரமாகக் காட்டும் பண்ணையாளர்கள், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இராணுவத்தினரிடம் நேரடியாகப் பேச முடியாத நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |