சிறிலங்காவிற்கு வருகை தந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்
ரஷ்யாவிலிருந்து சிறிலங்காவிற்கு கடந்த 10 மாதங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சிறிலங்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் விமான சேவையின் எஸ்யூ 288 ரக விமானம் மூலம் 290 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம்(17) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி, கடந்த 10 மாதங்களில் சிறிலங்காவிற்கு வருகைதந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி சிறிலங்காவிற்கு வந்த ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக சிறிலங்கா அதிகாரிகள் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்தனர்.
நேரடி விமான சேவை
அந்த நடவடிக்கையை அடுத்து சிறிலங்காவுடனான நேரடி விமான சேவையை தற்காலிகமாக இடை நிறுத்த ரஷ்யா தீர்மானித்தது.
எனினும், தூதரகங்களின் பேச்சுவார்த்தையின் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட்டது.
அதன்படி, இன்று வரையிலான 10 மாத காலப்பகுதியில் ஏரோஃப்ளோட் விமானம் சிறிலங்காவிற்கு 101 நேரடி விமான சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.