வழக்குகளால் சிக்கி திணறும் டயானா கமகே
இரட்டை குடியுரிமை வைத்திருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(diana gamage)வுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரம( Rehan Jayawickreme) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தனது தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததற்காக கமகேவுக்கு எதிராக ஜெயவிக்ரம் இன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் மீது விமர்சனம்
சட்டத்தரணி தர்மஜா தர்மராஜா(Tharmaja Tharmaraja) ஊடாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டதுடன், ரெஹான் ஜயவிக்ரம சார்பில் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா(Hejaaz Hizbullah) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபராக பெயரிடவும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கமகே சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த வழக்கில் டயானா கமகேவை சந்தேகநபராகப் பெயரிட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக மே மாதம், டயானா கமகே இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரித்தானிய குடியுரிமை காரணமாக கமகேவின் குடியுரிமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

