அரசுக்கு பேரிழப்பு- இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) முன்னெடுத்த 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 40க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு துணைப் பொது முகாமையாளர்(வணிக) பதவியை வழங்குவதை எதிர்த்து SLRSMU தனது அடையாள வேலைநிறுத்தத்தை நேற்று இரவு தொடங்கியது.
பல ரயில் சேவைகள் இரத்து
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில், புத்தளம் நோக்கிச் செல்லும் அலுவலக ரயில் மற்றும் பதினொரு அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.
24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு
நியமிக்கப்பட்ட நபர் புகையிரத திணைக்களத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உயர் பதவிகளுக்கு அவர்களை நியமிக்கும் போது உரிய அதிகாரிகள் அவர்களின் பின்னணி மற்றும் கடந்த கால பதிவுகளை சரி பார்க்காமல் இளைஞர்களை தவிர்த்து அவ்வாறானவர்களை நியமிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த நியமனத்திற்கு எதிராக செவ்வாய்க்கிழமை (9) இரவு 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க SLRSMUவின் மத்திய குழு தீர்மானித்தது.
