இலங்கையில் உருவாகும் கவர்ச்சிகர சுற்றுலாத் தலங்கள்
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து இலங்கையை சுற்றியுள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுலாத் தலங்கள் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி
எல்ல, அறுகம்பே, நுவரெலியா, கல்பிட்டி மற்றும் ஹிக்கடுவ ஆகிய நகரங்களுக்கான சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
அவற்றில், எல்ல சுற்றுலாத் திட்டம் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அறுகம்பே, கல்பிட்டி, ஹிக்கடுவ மற்றும் நுவரெலியா ஆகிய சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், கேஜ் வாடியா, சீதாகல, நாயாறு கடற்கரை, பண்டைய ஆளுநர் அலுவலகம், வாய்க்கல, சமபலதவி கடற்கரை உள்ளிட்ட 24 புதிய சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியதாக குறித்த செயல்த்திட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.