நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதல்களும் காரணம் - பிரசன்ன ரணதுங்க
போராட்டம் என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் அக்கிராசன உரை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
69 லட்சம் மக்கள் ஆணை தற்போது செல்லுப்படியில்லை என அனைவரும் கூறுகின்றனர். ஆம் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.சிலர் 69 லட்சம் மக்களின் ஆணையை பெற்று தெரிவு செய்த அதிபரை விலகுமாறு கோரி போராடினர்.
அந்த போராட்டம் சதித்திட்டமாக, சர்வதேச சதித்திட்டமாக அல்லது எதுவாக இருந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக கிறிஸ்தவ தேவாலயம் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தியது அது மாத்திரமல்ல ஹிட்லர் என்றனர். வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தினார் என்றனர். பிணம் திண்ணும் முதலைகள் பற்றி கூறினர். அப்படி கூறிய அதிபர் அமைதியாக தனது பதவியை ராஜினாமா செய்து விலகினார்.
2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் தற்போதைய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டது. அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 67 லட்சம் வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் மொட்டுக்கட்சியின் சார்பில் 147 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 54 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 பேரும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு பொதுஜன பெரமுன சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்குகிறது. அர்ப்பணிப்புகளை செய்து நாங்கள் இதற்கு ஆதரவளிக்கின்றோம். மொட்டுக்கட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக நாங்கள் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு உதவுகிறோம். போராட்டம் என்ற பெயரில் முன்னாள் அதிபர் பதவி விலகுவதற்கான பின்னணி உருவாக்கப்பட்டது. கொலை செய்து, வீடுகளை தீயிட்டு, அரச சொத்துக்களை அழித்து, மக்களை அச்சுறுத்தினர்.
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல. இந்த போராட்டத்தில் இரண்டு தரப்பினர் இருந்தனர். அமைப்பு ரீதியான மாற்றத்தை கோரிய இளைஞர்கள் ஒரு தரப்பு. மற்றைய தரப்பு போதைப் பொருளுக்கு அடிமையான, குடும்பங்களை இல்லாமல் செய்துக்கொண்ட சமூகத்தின் மீது வெறுப்புக்கொண்ட தரப்பு. சாதாரண போராட்டகாரர்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தை கோரினர்.
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்ட போராட்டகாரர்கள் ராஜபக்ச அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரினர். சமூக ஊடகத்தில் இருக்கும் ஒரு பெண் போராட்டத்தின் உண்மையான நிலைமையை ஊடகங்களிடம் கூறியிருந்தார். போராட்டத்திற்கு கிடைத்த உதவிகளை கொள்ளையிட்டனராம். சமையல் அறையில் இருந்த உணவு பொருட்களை கொள்ளையிட்டனராம். அவருக்கு கனடாவில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டதாம். நூர் அக்கா என்ற பெண் சமூக ஊடகங்களில் கூறியிருந்தார்.
அப்படியானால், போராட்டத்திற்குள் என்ன நடந்தது என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள முடியும். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீயிட்டு, அவர் பதில் அதிபராக பதவியேற்பதை தடுக்க முயற்சித்தனர். போராட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் தலைமை தாங்கிய போராட்டம். போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளனர். இதனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிபரின் கொடியை கட்டில் விரிப்பாக பயன்படுத்தியமைக்காக கைது செய்ய வேண்டுமா என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். அதிபர் மாளிகைக்குள் சென்று அதிபர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக வழக்கு தொடர வேண்டுமா என கேட்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களது வீட்டுக்கு வந்து, மனைவியின் ஆடையை கட்டிலில் போட்டு அதன் மீது படுத்தால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்வார்?. மன்னிப்பாரா அல்லது காவல் நிலையத்திற்கு சென்று சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறுவாரா. அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபரை அழைத்து கட்டிலில் உறங்குமாறு கூறுவாரா என கேட்கின்றேன்.
இதனால், நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்ற விடயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளமைக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு முன்னாள் அதிபர் மீதும் தற்போதைய அதிபர் மீது குற்றம் சுமத்தி பயனில்லை. 30 ஆண்டுகளாக நாட்டில் இருந்த புலிகளின் பயங்கரவாதம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்பது எவருக்கும் நினைவில் இல்லை.
புலிகளின் தாக்குதல்களின் பாரதூரம் எந்தளவுக்கு இருந்தது என்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 1.5 என்ற வீதத்திற்கு வீழ்ச்சியடைந்த காலம் இருந்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது பாரிய தாக்குதல் நடத்தினர். கொலன்னாவ எண்ணெய் தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தினர். இலங்கை மத்திய வங்கியின் மீது தாக்குதல் நடத்தினர். சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள், மத வழிப்பாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீமஹாபோதி, தலாத மாளிகை, கொழும்பு கலதாரி ஹோட்டல் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தினர்.
அன்று மிகவும் பயங்கரமான நிலைமை காணப்பட்டது. 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 70, 88,89 ஆம் ஆண்டுகளில் தென் பகுதிகளில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை. 1962 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி, 63 ஆம் ஆண்டு மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் என்பன நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நெருக்கடிக்கும் காரணமாக அமைந்தன எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.