சபாநாயகருக்கு எதிரான பிரேரணை: மைத்திரியின் நிலைப்பாடு
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கைச்சாத்திட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை பொருட்படுத்தாது, அதனை நிறைவேற்றுவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்தன.
சபாநாயகரின் செயற்பாடு
அதன்போது, சபாநாயகரின் இந்த செயற்பாடு, சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா கூட்டணி ஆகியவை தெரிவித்துள்ளன.
நம்பிக்கையில்லா பிரேரணை
எவ்வாறாயினும், இதனை எதிர்ப்பதாகவும் சபாநாயகருக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |