அரச ஊழியர்களிடம் தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை
பிரதி அமைச்சர்கள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டாம் என அரச ஊழியர்களை கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
நேற்று (14) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருகின்றது.
சபாநாயகர் வெளியிட்ட கருத்து
பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புகூற மாட்டார்கள் என்று சபாநாயகர் இந்த வாரம் தெளிவாகக் கூறினார். எனவே, அவர்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கருத வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் அவர்கள் சலுகைகளைக் கோர முடியாது. அதன்படி, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்
ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகளை நான் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பிரதி அமைச்சர்கள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டாம் என்று அரச ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
