காணாமல் போன முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் : தொடரும் தேடுதல் நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியிலான தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் உதவிகளைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இணைந்து நேற்று (28) தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கடற்றொழிலாளர்கள் 8 படகுகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டபோதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை வேளையானதால் கரை திரும்பினர். இருப்பினும், இதுவரை கடற்றொழிலாளர்களோ அல்லது படகோ கண்டறியப்படவில்லை.

அர்னாப் புயல் காரணமாக நிலவிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பினால், குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல்நாடுகளின் கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறும் காணப்படுகிறது.
எனவே இன்றைய தினமும் விமானப்படை மற்றும் கடற்படையின் உதவியோடு தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் கடற்றொழிலாளர்களும் இன்று காலையில் மீண்டும் தேடுதல் பணியைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |