மீண்டும் மீண்டும் சூறையாடப்படும் தமிழர் நிலங்கள் - பெரும் எதிர்ப்பில் களமிறங்கியுள்ள மக்கள்!
குருந்தூர் மலையில் நில அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிந்த நிலையில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த அளவீட்டுப் பணி இன்று காலையில் இடம்பெறவுள்ளதாக மக்கள் அறிந்த நிலையில் அளவீட்டுப் பணி இடம்பெறும் இடத்திற்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய 5 ஏக்கர் காணியை சுவீகரித்து, ஏனைய காணிகளை விடுக்கும் நோக்குடன் இந்த அளவீட்டுப் பணி இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், எமது காணிகளை அளவீடு செய்ய நாம் ஒரு வோதும் அனுமதிக்கமாட்டோம் என மகக்ள் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள், அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பில்
மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில், அப்பிரதேச அரசியல் பிரமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு சென்று மக்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, எமது பூர்வீக காணிகளில் எம்மை மீள் குடியேற்றாது காணி அளவீடு செய்வதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும், எம்மை மீள் குடியேற்றம் செய்து விட்டு நீங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை அளவீடு செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆம் ஆண்டு உறுதியின் படி தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின்படி 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
வரைபடம்
அந்த இடத்தை மீள் அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேச செயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடத்தில் உள்ளடக்கபட்டிருந்தது.
இதன் தொடர்சியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.
மக்கள் காணி
இந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்குரிய தமிழ் மக்களுடையதாகும். மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குகின்றது.















