முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பிரித்தானியாவில் மக்கள் பாரிய அளவில் ஒன்று கூடி அஞ்சலி..!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தைப்போலவே தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிளெல்லாம் மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் பிரித்தானியாவை பொறுத்த வரையில் இந்நிகழ்வுகள் பல இடங்களில் ஏற்பாடாகியிருந்தது.
உலகில் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றய தினம் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஒன்று கூடி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
மக்கள் ஊர்வலம்
மேலும்,இனப்படுகொலையின் 14 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிரித்தானியத் தமிழர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடியிருந்தனர்.
அத்தோடு,போரின் இறுதி நாட்களை விவரிக்கும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர், செயின்ட் ஜேம்ஸ் பார்க், டிராஃபல்கர் சதுக்கம் வழியாக 10 டவுனிங் தெரு நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றிருந்தனர்.
பின்னர், 10 டவுனிங் தெருவுக்கு எதிரே கூடிய மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி ஈகை தீபம் ஏற்றினர்.
பொதுமக்கள் மீதான போர்
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், உரையாற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் பார்பரா,
"தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நியாயமான அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை இங்கிலாந்து அரசாங்கம் ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
மேலும்,10 டவுனிங் தெருவுக்கு வெளியே 'பொதுமக்கள் மீதான போர்' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
