வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்)
வடுக்களும் வலிகளும் நிறைந்த தமிழர் வரலாற்றில் காலங்கள் கடந்தும் நினைவுகளில் இருந்து அழியாது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் ஒரே முகவரியாய் போன முள்ளிவாய்க்கால் மண்ணின் கதை கூறும் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தவிர்க்க முடியாத ஒன்றே.
உயிரைப்பிடித்து வைத்த உன்னத கஞ்சி எனப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சியே சுமக்க முடியாத வலி சுமந்த நேரத்தில் எம் தமிழ் மக்கள் உயிரை காத்த உன்னத உணவாகும்.
அதை நினைவுகூறும் முகவமாவே முள்ளிவாய்க்கால் கஞ்சி தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம்- வடமராட்சி கொற்றாவத்தை சல்லியாவத்தை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த உப்பில்லா கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு உப்பில்லா கஞ்சி வழங்கி வைத்தார்.
இதேவேளை அங்கு கூடியிருந்த புலனாய்வாளர்களும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உப்பில்லா கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பினர் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (13) வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மே 12 முதல், மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நேற்றுமுதல் (12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
கஞ்சி வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை
இன்று அம்பாறையில் இரண்டாவது நாளாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோயில் பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
