தமிழர் தலைநகரில் மக்கள் பங்களிப்புடன் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி!
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்து, எமது வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் உணர்வுபூர்வ நிகழ்வு தமிழர் தாயகம் முழுவதும் பரவலாக நடைபெறுகிறது.
அந்தவகையில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் தமிழரின் தலைநகரில் மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு எமது வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகினை பெற்று திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக, இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு
முள்ளிவாய்க்காள் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஒன்று சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முகமாக கஞ்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








