முல்லைத்தீவுச் சிறுமிக்கு நடந்தது என்ன? தந்தை வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்
முல்லைத்தீவில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அச்சிறுமியின் தந்தை பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயதுடைய நிதர்சனா, 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
ஆனாலும், தற்போது அவரது தந்தையார் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவை அனைத்தையும் பொய் என நிரூபித்துள்ளது.
தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இதனை அறிந்த தாய் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடையச் செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும்,
குறித்த சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் அவர்களது வீடு சோதனையிடப்பட்ட போது இரத்தக் கறைபடிந்திருந்த மேசை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.