மியன்மாரில் நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை! ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
மியன்மாரில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற பயங்கரவாத செயல்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய குற்றத்தில் நான்கு ஜனநாயக ஆர்வலர்கள் மியன்மார் இராணுவத்தினரால் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நால்வரின் மரண தண்டனை குறித்து மியன்மாரின் அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் எப்போது அல்லது எப்படி தூக்கிலிடப்பட்டனர் என்பது குறித்து அந்த ஊடகம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.
மியன்மாரில் 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதல்முறையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கண்டனம்
இந்தக் கொலைச் செய்தி தொடர்பில், எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளும் தமது கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
