தொன்மங்களைப் பாதுகாக்க வேண்டும் : கிளிநொச்சியில் எழுத்தாளர் அ. இரவி வலியுறுத்தல்
ஈழத் தமிழர்களாகிய நாம் எம் மத்தியில் உள்ள தொன்மங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அதன் வழியாக எமது பண்பாடு பாதுகாக்கப்படுகிறது என்றும் லண்டனை சேர்ந்த எழுத்தாளர் அ. இரவி தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய 'கொற்றவை பற்றி கூறினேன்' நாவல் வெளீயிட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (11) நூல் விமர்சனக் கூட்டம் இடம்பெற்றது.
கலைப்படைப்பு
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
கலைப்படைப்பு என்பது அதன் அழகியல் அடையாளங்களுடன்தான் இருக்கும் என்றும் அதனை நாமே புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் எமக்கு வழங்கப்பட்ட கல்விமுறை நம் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கேள்விகளால் தொன்மங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது நாவலுக்கு நடத்திய விமர்சனக் கூட்டத்திற்கு நன்றி பகிர்ந்த எழுத்தாளர் அ.இரவி, தொடர்ந்தும் கிளிநொச்சியில் இத்தகைய இலக்கிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற விமர்சனக் கூட்டத்தில், விமர்சன உரைகளை முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் செ. விந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அ. சத்தியானந்தன், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் பால சயந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இனப்படுகொலையை மூடிமறைக்க
நினைவுகளை மறக்கடிக்க நிர்ப்பந்தம் நிகழ்வில் தலைமயுரை ஆற்றிய எழுத்தாளர் தீபச்செல்வன், ஒரு படைப்பாளியால் தன் கடந்த காலத்தை இலகுவில் மறக்க முடிவதில்லை. அவன் கடந்த காலத் துயரங்களில் இருந்துதான் தன் படைப்புக்களைத் தேடுகின்றான், என்றும் நினைவுகளையும் ஞாபகங்களையும் இலக்கியமாக்குவது உலகமெங்குமுள்ள மரபு என்றும் கூறினார்.
அத்துடன் ஈழத்தில் நினைவுகளை மறக்க நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும் இறந்த காலத்தை மறந்துவிடுங்கள் என்பதன் வாயிலாக வரலாற்றை மறக்கடிக்க முயல்வதுடன் இனப்படுகொலையை மூடிமறைக்கவும் முயற்சிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்ட தடையை நீக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் : பிரசன்ன ரணதுங்க
இரவியின் பணிகளுக்கு வாழ்த்து
நிகழ்வில் வரவேற்புரையை தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கி. அலெக்ஷன் வழங்கினார்.
எழுத்தாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் அ. இரவியுடனான நினைவுகள் குறித்துப் பேசியதுடன் நிகழ்வுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இரவியின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் லம்போ கண்ணதாசன் நிகழ்வை தொகுத்து வழங்க, கவிஞர் வில்லரசன் நன்றியுரையை நிகழ்த்தினார்.
நிகழ்வில் இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.