கோட்டாபய - ரணிலும் ‘பெயில்’- ஆளும் தரப்பு எம்.பி பகிரங்க எச்சரிக்கை
அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்
இந்த அரசாங்கமும் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாகத் தெரியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பலரது கோரிக்கையை குழப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் குழுவொன்றுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பிலேயே கொடஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எவரும் இன்று பேசமாட்டார்கள் எனவும், அரச தலைவர் நீண்ட காலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனவும் கொடஹேவா தெரிவித்தார்.
மீண்டும் வீதியில் இறங்கவுள்ள மக்கள்
இவ்வாறு மக்களின் பிரச்சினைகளை மறந்தால் விரைவில் அரசாங்கம் வீட்டுக்குப் போகுமாறு தெரிவித்து மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள். அரசியல் ரீதியாக கடினமான முடிவுகளை எடுப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கம் வாய்ப்பளிக்கும் என்றும் அதனால்தான் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியினருக்கு, குறைந்த பட்சம் ஆளும் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமித்தமையே வழிவகுத்துள்ளதாகவும் கொடஹேவா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிரந்தர அதிகாரம் இல்லாத இந்த அரசாங்கம் எவ்வாறு நாட்டின் சார்பாக முக்கியமான மற்றும் கடினமான தீர்மானங்களை எடுக்க முடியும் என கேள்வி எழுப்புவதாக நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் மறுசீரமைக்க முடியாது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அமைச்சரவையால் ஒருபோதும் மறுசீரமைக்க முடியாது எனவும், அவ்வாறு செய்யாமல் அரசாங்க செலவினங்களை எவ்வாறு குறைப்பது என்பது புதிராகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்விற்கான ஒரே தீர்வு அந்தப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் ஏகபோக உரிமையை உடைப்பதே எனத் தெரிவித்த அவர், இதற்கு அமைச்சரவையால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
