நல்லை ஆதீன குருமுதல்வரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்
புதிய இணைப்பு
இன நல்லிணக்கத்துக்காக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக சேவை அளப்பரியது. அவரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில், ' நல்லை ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி வேதனையளிக்கின்றது.
ஆன்மீக பணியென்பது புனிதமானது. அப்பணியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தவர்தான் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
மக்களுக்காக பல சேவை
ஆன்மீக சேவைக்கு அவர் ஒருபோதும் மாசு ஏற்படுத்தவில்லை. அதன் புனிதத்தன்மையை கடைசி வரை காத்தார்.
நெருக்கடியான நேரங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஆசி வேண்டி பூஜைகளை நடத்தியுள்ளார்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்துள்ளார்.
இப்படியான மகான்களின் மறைவு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். பூரணமடைந்த சுவாமிகளின் ஆத்மா இறையடி சேர இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் பூரணரமடைந்த செய்தி சைவ மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக இந்துக் குருமார் அமைப்பு தெரவித்துள்ளார்.
இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும், “இந்தியா மதுரை ஆதீன திரு மடத்தின் தொடர்புடன் 1966ம் ஆண்டு ஆரம்பித்து சமயத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து பல்வேறு நற்பணிகள் ஆற்றிவந்துள்ள ஆதீனமாகும்.
நல்லை ஆதீன இரண்டாவது குரு
முதலாவது ஆதீன கர்த்தராக மணிஐயரவர்கள் விளங்கினார்கள். நல்லை ஆதீன இரண்டாவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் விளங்கினார்கள்.
அமைதியான சுபாவமுடையவராக அனைவரையும் அன்புடன் வரவேற்று அரவணைத்து வழிகாட்டிடும் ஓர் மகா புருஷராக விளங்கினார்கள்.
இச்சமயத்தில் சைவ மக்களாகிய நாமெல்லோரும் சுவாமிகள் திருவடி பணிந்தவர்களாக சிவசாயுச்சியத்திற்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்வோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர்
இதேவேளை உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கவலை வெளியிட்டார்.
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக வெளியிட்ட இறை பிரார்த்தனை செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், “யாழ்ப்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரை ஆதீனம் 291ஆவது மகாசந்நிதானம் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்று தம்முடைய கதாகலேஷத்தால் சமயத்தை புராணத்தை மாதகணக்கில் சொற்பொழிவாற்றிய சாமிநாத சுவாமிகளுக்கு பின் இரண்டாம் பட்டமாக தருமை ஆதீனத்தில் முறையாக காஷாயம் தீட்சைகள் பெற்று ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பலமாநாடு நிகழ்வுகளில் பங்கேற்று சமயம் பரப்பியவர்.
நாம் மாவிட்டபுரம் கும்பாபிஷேகம் தரிசிக்க சென்றபோது கூட சித்தாந்த மாநாட்டிற்கு அழைப்பு விட்டோம். இந்தியாவில் தங்கி மருத்துவம் பார்க்கலாம் என்றோம். வருகிறேன் என்று கூறி மகிழ்ந்தவர்.
மாநாடு தொடக்கத்தில் முதல்நாள் பரிபூர்ணம் எய்தியமையால் தாங்முடியாது துயறுருகின்றோம். சைவம் காக்கும் தூண்சரிந்தது தக்கவர்கள் அம்மடத்தின்னின்று சமயத்தை காக்க செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

