இலங்கைத் தமிழர்களுக்கு 10 நாள் கெடு விதித்த நாமக்கல் மறுவாழ்வு முகாம்
தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்களது நாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், பரமத்தி வேலூரில் உள்ள காவல்துறை, அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முகாமில் உள்ள 62 பேர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுலா விசாக்களில் தமிழகத்துக்குச் வந்துள்ளனர்.
காஷ்மீர் - பஹல்காம் தாக்குதல்
அவர்கள் விசாக்களை புதுப்பிக்கவோ அல்லது இலங்கைக்குத் திரும்பவோ முயற்சிக்காமல் பதிவின்றி சட்டவிரோதமாக முகாமிலேயே தங்கிவிட்டனர்.
இதில் சிலர் இலங்கைக்கு மீண்டும் சென்று முகாமுக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், காஷ்மீர் - பஹல்காம் தாக்குதல்களை அடுத்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளுக்கு அமையவே, தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னரும் இதுபோன்ற உத்தரவுகள், அதிகாரிகளால் வாய்மொழி மூலம் கூறப்பட்டாலும் கூட, தற்போது இந்த உத்தரவு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தாம் கருதுவதாக நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை ஏதிலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஏதிலிகள், நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கு சட்டப்பூர்வமாகத் தங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று இந்திய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏதிலிகள்
இதேவேளை, இந்தியாவில், இலங்கை ஏதிலிகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் வெளிநாட்டுத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணைக்குழுவிடம், தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவ்வாறு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை ஏதிலிகளில், இந்தியக் குடியுரிமையைக் கோரியுள்ளவர்கள் தொடர்பான தகவல்களும் அந்த ஆணைக்குழுவிடம் இல்லை என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
