பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து ஆட்சி - பொறுக்க முடியாது: நாமல் சீற்றம்
பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் மத்தியில் தமக்கெதிரான நிலைப்பாடுகள் அதிகரித்து வருகின்றது என்பதை இந்த அரசாங்கம் இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
அவ்வாறிருந்தும் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் அவதானம் செலுத்துவரை விடுத்து, எம்மை கைது செய்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது.

காவல்துறை மா அதிபரும் பெலவத்தையிலிருந்தே காவல்துறையினரை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றார்.
அதனால் தான் அவரால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவோ அவற்றை கட்டுப்படுத்தவோ முடியாமலுள்ளது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியற்றவையாகியுள்ளன. உண்மையில் நாடு இந்த ஆட்சியில் தான் வங்குரோத்தடைந்துள்ளது.
பாதுகாப்புடன் நடைபயிற்சி
நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியினதும் வாழ்க்கை முறைமை தொடர்பில் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புடன் நடைபயிற்சி செய்வதாக அவர் மீது எம்மால் குற்றஞ்சுமத்த முடியாது. அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.
அதேபோன்று தான் ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளை அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமானால் இனிவரும் எந்தவொரு ஜனாதிபதியும் நாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்வர மாட்டார்கள்.
பூகோள அரசியல்
நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில் பூகோள அரசியலில் எம்மால் தனித்து பயணிக்க முடியாது.

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. தற்போது சட்டமா அதிபர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதைப் போன்று முன்னர் சில நீதியரசர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.
காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான தலையீடு காணப்படுகிறது. இது நாட்டுக்கு சிறந்ததல்ல என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |