உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தேர்தல் பேரணி மற்றும் பிரச்சாரம் என்பன உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
அந்தவகையில், அனுராதபுரம் (Anuradhapuram) கடப்பனஹ பகுதியில் இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணி பெருமளவிலான பங்கேற்பாளர்களை எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபச்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரசியல் கட்சிகள்
இந்த நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இளைய வேட்பாளரான நாமல் ராஜபச்ச, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பரவலான ஆதரவைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணிக்கு வேறு மாகாணங்களில் இருந்து கூட்டத்தை வரவழைக்க வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு நாமல் பணிப்புரை விடுத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன், தொலைதூர பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வருவதன் மூலம் மக்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சில தரப்பினர் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்திருந்தாலும், அடிமட்ட ஆதரவு அவர்களுடன் உறுதியாக இருப்பதாகவும், அனைத்து தரை மட்ட ஆதரவாளர்களும் மீண்டும் கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |