கொள்கலன் விவகாரம் குறித்த அர்ச்சுனாவின் கருத்து உண்மை : நாமல் பகிரங்கம்
போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பொருட்கள் கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் கொள்கலன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா (Archchuna) கூறிய விடயங்களும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் உற்பத்தி நிலையம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கத்தினால் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கு மேலதிகமாக சில கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சினது செயலாளர் கூறுகிறார்.
குறித்த கொள்கலன்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து தாம் அறிந்திருப்பதாக துறைமுக அமைச்சர் முன்னதாக பொறுப்புடன் கூறினார். எனவே, இந்த கொள்கலன்களும் அவற்றில் ஒன்றா? என்று அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.
நுவரெலியாவில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறெனின் அந்த காணி யாருக்கு சொந்தமானது எனவும் ஆராயப்பட வேண்டும்.
பல்வேறு முதலீடுகளை கொண்டுவருவதாக கூறிய அரசாங்கம் இறுதியில் போதைப்பொருள் முதலீடுகளையே கொண்டுவந்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுடனும் செயற்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பலர் கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கும் ஆதரவளித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மொட்டுக் கட்சியினரை தொடர்புபடுத்தி பேசும் அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிம் தொடர்பில் எந்த வகையான நடவடிக்கையை எடுத்துள்ளது?
பயங்கரவாதிகளின் பணத்தில் அரசியல் செய்யும் அரசாங்கம் தற்போது ஒரு உறுப்பினரின் பிரச்சினையை கொண்டு பொதுஜன பெரமுன மீது சேறுபூச முயல்கிறது.
ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியிருந்தார். போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பொருட்கள் இந்த கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் சில நேரம் அர்ச்சுனா கூறிய விடயங்களும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த கொள்கலன்கள் குறித்த வெளிநாடுகளிலிருந்து எந்தவித புலனாய்வு அறிக்கைகளும் கிடைக்கவில்லையா அல்லது வந்த அறிக்கைகளை புறக்கணித்து அரசாங்கம் கொள்கலன்களை வெளியேற்றியதாக என்பதை காவல்துறை மா அதிபர் கூற வேண்டும்.
சுனில் வட்டகலவின் செயற்பாடுகள்
கடந்த ஜனவரி மாதம் வந்த கொள்கலன்கள் செப்டம்பர் மாதத்தில் மீட்கப்பட்டுள்ளன. இந்த 9 மாத இடைவெளியில் குறித்த கொள்கலன்களிலிருந்து பொருட்கள் அதிலேயே இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை. வந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த கொள்கலன்கள், குறித்த இடத்துக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டன? அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் யார்? என்றும் அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
எங்களது கைகளில் இரத்தம் படியவில்லை. எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவில்லை. இயலாமையை மூடிமறைக்க பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.
கடந்த காலங்களில் எமில் காந்தன் என்ற நபருடன் நான் இருந்ததை போல ஒரு படத்தை காண்பித்து என்னையும் விடுதலைப்புலிகளாக காட்டும் முயற்சிகளும் இடம்பெற்றன. ஆட்சியில் இல்லாத போது பொய்கூறிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் பொய்களையே கூறுகிறது.
பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் செயற்பாடுகளும் கவலையளிக்கிறது. எனவே, இந்த விடயத்தை அரசியல் பழிவாங்களுக்கு பயன்படுத்தாமல் அரசாங்கம் பக்கசார்பற்ற வகையில் விசாரணைகளை முன்னெடுக்க ஆவண செய்ய வேண்டும்“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
