தேர்தல் வெற்றிக்கு வடக்கில் நாமலின் திட்டமிட்ட அடித்தளம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தோல்வியின் மூலம் பாடம் கற்றுக்கொண்ட நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), வடக்கில் தனது தளத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னடுத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவு என்ற போர்வையில் பிரசாரம் செய்து தென்னிலங்கை வேட்பாளர்களை கவர்ந்து, ராஜபக்சர்கள் ஆட்சி அமைத்த போதும், அந்த ஆட்சிமுறை 2015 ஆம் ஆண்டிலேயே நிலையிழந்து போனது. இதற்க்கு பிரதான காரணம் சிறுபான்மையினரின் வாக்கு வீதமே.
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலின் ஒரு வரலாற்று மாற்றம் என்றே குறிப்பிட்டாகவேண்டும்.
மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக, மூன்றாவது முறையாக பதவிக்கு வர விரும்பினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, ராஜபக்சவின் அரசாங்கத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது.
இதில் ராஜபக்சவின் 47.58 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில், மொத்த வாக்குகளில் 51.28 சதவீதத்தை பெற்று சிறிசேன (Maithripala Sirisena) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதில் மைத்திரியின் வெற்றியை தீர்மானித்ததென்னவோ சிறுபான்மையினரின் வாக்குகளே. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் மேல்மாகாண வாக்குகள் அனைத்தும் மைத்திரிக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டியது.
இதற்கமைய தனது தந்தையின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட நாமல், வடக்கில் தனது தளத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். இதன் அடித்தளமே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோவில் கீதநாத் காசிலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு.
கீதநாத் காசிலிங்கம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்பதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது குறித்து அவருக்கு பணிகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீதநாத் காசிலிங்கம், இதற்கு முன்னர் மகிந்த பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டார். பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவராகியுள்ளார்.
விலகிய தம்மிக்க பெரேரா
2022 இன் பொருளாதார நெருக்கடியானது, சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டை ஆட்சி செய்த பிரதான அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை சிதைத்துள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலை பாரம்பரிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பது என்ற விடயத்தை சவாலாக்கியுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக ராஜபக்சக்களின் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நியமித்துள்ளது.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் போட்டியிட விரும்பவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அக்கட்சி நாமலை நியமித்தது. பெரேரா முழுவதுமாக தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலகினார் என்பதை சிலர் இன்னமும் ஏற்க மறுக்கின்றனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தும் ராஜபக்சர்கள் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் கடங்கா களங்களில் எதிரொலித்தது.
இந்த கருத்தாடலின் நகர்வாக தமிக்கவின் விலகல் இருக்கலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகிறது. பெரமுன என்பது ராஜபக்சக்களுக்காக ராஜபக்சக்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான்கு பிரதான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்க, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ஆகியோர் அவர்களாவர்.
ராஜபக்சக்களே காரணம்
பெரும்பாலான இலங்கையர்கள் தங்களுடைய தற்போதைய பொருளாதார சீர்கேடுகளுக்கு ராஜபக்சக்களே காரணம் என்று நம்புகிறார்கள். அதனால் நாமலின் தேர்தல் வாய்ப்புகள் பலவீனமாக உள்ளதாகம் கூறப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரேராவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் என்றும், அவரை வீழ்ச்சியடையச் செய்து, நாமல் தலைமையில் மெதுவாக மீளக் கட்டியெழுப்பப்படும் என்றும் பல இலங்கையர்களின் கருத்தானது.
அப்படியானால், நள்ளிரவில் ராஜபக்சக்கள் ஏன் மனம் மாறினார்கள்? நாமல் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையை ஏன் பணயம் வைக்கிறார்கள்? 90க்கும் மேற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொட்டுவை கைவிட்டு விக்ரமசிங்கவுடன் இணைந்த பின்னரே நாமலை களமிறக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
இந்த எம்.பி.க்கள் SLPP மாவட்டத் தலைவர்களாக இருந்தனர், மேலும் எஞ்சியிருந்த பெரும்பாலான அடிமட்ட செயற்பாட்டாளர்களை அவர்கள் உடன் அழைத்துச் சென்றனர். சிறந்த வகையில், கட்சியில் இப்போது சில எம்.பி.க்கள் மற்றும் அடிமட்ட அமைப்பாளர்கள் உள்ளனர், மேலும் அதிகமான மக்கள் விக்ரமசிங்க அல்லது பிரேமதாசாவைக் கடக்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என கூறப்படுகிறது.
ராஜபக்சர்களின் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான அவருக்கு இலங்கை அரசியலின் நுணுக்கங்கள் தெரியும். அவருக்குப் பெயர் அங்கீகாரம் உண்டு, மகிந்தவின் வாக்குகளை சேகரிக்கக்கூடிய ஒரே ஒருவர் அவர்தான். ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அரசியல் வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ள, அவசரமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார்கள்.
ஜனாதிபதி தேர்தல்
எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முடிந்தவரை அதிக இடங்களைப் பெறுவது குறித்தும் அந்தக் கட்சிகள் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனா நாமல் ராஜபகச ஆகிய நான்கு முக்கிய வேட்பாளர்கள் இம்முறை களமிறங்குகின்றனர்.
இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வழக்கம் போல், தேர்தல் உறுதிமொழிகள் இம்முறையும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் சொல்லாட்சி மொழிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் இப்படியொரு சத்தம் போடுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. 2022ல் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானிக்க மக்களுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், 2022இல் நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இப்போது கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வெளிநாட்டு கடன்களின் பிடியை அவிழ்க்க இன்னும் நிறைய காலம் செல்லும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.
தற்போதைய போக்கில் உறுதியாக இருப்பதா அல்லது ஒரு வித்தியாசமான அணுகுமுறையை வாக்காளர்கள் முன்னெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்னும் 4 வாரங்களில் இதற்கான முடிவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |