போதைப்பொருள் தடுப்பு மையத்தின் தகவல் கசிவு: அதிகாரிகளும் இடமாற்றம்!
பல நாள் கடற்றொழில் படகுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தும் படகுகள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் கண்காணிப்பு அமைப்பு (VMS) , 57 வெவ்வேறு ஐபி முகவரிகளிலிருந்து வெளிப்புறமாக அணுகப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இதன்மூலம் பெறப்பட்ட இரகசிய தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தகவல் கசிவு
கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்த VMS அமைப்பை பயன்படுத்தி கடந்த காலங்களில் வெற்றிகரமான சோதனைகளை மேற்கொண்டிருந்தாலும், அண்மையில் தொடர்புடைய தகவல்களின் கசிவு காரணமாக, கடத்தல்காரர்கள் கடற்படை ரோந்துகளைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களையும் படகுகளையும் மாற்றி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த, முன்னர் பல அதிகாரிகளுக்கு அணுகக்கூடியதாக இருந்த இந்த அமைப்பின் கடவுச்சொற்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் புதிய கடவுச்சொற்கள் இரு உயரதிகாரிகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
இடமாற்றம்
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், தங்கள் கடமைகளை முறையாகச் செய்யத் தவறியதாகவும் சந்தேகிக்கப்படும் ஐந்து அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர்களில் சுமார் 20 அதிகாரிகளின் சொத்து அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான சொத்துக்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
புதிய நியமனங்கள்
எதிர்வரும் காலங்களில் காலத்தில், இந்தப் பணியகத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர்களின் முந்தைய சேவைப் பதிவுகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.