பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் குறித்து முக்கிய கலந்துரையாடல்
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த உபகுழு, அதன் தலைவியான பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathne) தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயங்கள் ஆராயப்பட்டன.
அதன்படி, அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அதிபர் பதவியை மாத்திரமே வகிப்பது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்
அனைத்து கல்விச் சேவைகளிலும் ஆறு வருட கால சேவையின் பின்னர் கட்டாய இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் குறித்து நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வியுடன் தொடர்புடைய ஐந்து முக்கிய தொழில்சார் சேவைகளிலும் உள்ள அதிகாரிகளின் தகுதிகள் மற்றும் பதவிகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் புதிய டிஜிட்டல் தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பாக அமைச்சின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னரே இது குறித்த இறுதிப் பரிந்துரைகள் வெளியிடப்படும் என உபகுழுவின் தலைவி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |