ரஷ்யாவுக்கு இறுகும் நெருக்கடி - நேட்டோ எடுத்துள்ள அதிரடி முடிவு
ரஷ்ய எல்லையில் படைகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு நேட்டோ நாடுகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பிலும் ஐரோப்பிய யூனியனிலும் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடுகளுடன் அண்டை நாடான உக்ரைன் சேரும்போது அது தங்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்யா தரப்பில் கருதப்படுகிறது.
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பு அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் ரஷ்யா மற்ற சில நாடுகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக நேட்டோ அமைப்பு கணித்துள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ரஷ்ய எல்லையில் படைகளை நிறுத்துவதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடின் மேற்கொண்ட நடவடிக்கைகள், நேட்டோ அமைப்புக்கு அதிருப்தியை அளித்துள்ளது. எதிர்காலத்தில் எந்த எல்லைக்கும் புடின் செல்வார் என்று நேட்டோ விமர்சித்துள்ளது.
குறிப்பாக புடினின் நடவடிக்கைகள் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நேட்டோ கணித்துள்ளது. இதன் அடிப்படையில் ரஷ்யா எல்லையில் முன்னெச்சரிக்கையாக நேட்டோ படைகளை நிறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினின் மட்ரிட் நகரில் வரும் ஜூன் மாதம் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உக்ரைன் விவகாரம், ரஷ்யாவின் நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
