இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்!
இலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு (2024) ஆரம்பமாகி எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் பணிகள் அனைத்தும் நிறைவடையவுள்ளது.
சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த எரிவாயு மின் நிலையத்தின் மூலம் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.
10 ஏக்கர் காணியில்
முத்துராஜவெல பிரதேசத்திலுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் காணியிலேயே இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்தக் காணியை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 01 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய மற்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், மின் உற்பத்தி நிலையத் திட்டத்திற்கு நிலக் கீழ் குழாய்த் தொகுதிகள் ( டீசல் மற்றும் குளிர்விக்கும் நீர்) அமைப்பதற்காக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முத்துராஜவெலவில் உள்ள 2 ½ ஏக்கர் காணியை இலங்கை மின்சார சபைக்கு 30 வருட குத்தகைக்கு கொடுப்பதற்குரிய ஒப்பந்தம் ஒன்றினையும் இந்த வேளையில் கையெழுத்திட்டிருந்தனர்.
350 மெகாவோட் மின் திறன் கொண்டது
இந்தக் காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதன் மூலம் 720 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இலங்கையின் முதலாவது இயற்கை எரிவாயு மின் நிலையமும் இந்த இடத்தைச் சூழ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது, 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இதன் நிர்மாணப்பணிகள், 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ளது.
இந்த மின் எரிவாயு நிலையமும் 350 மெகாவோட் மின் திறன் கொண்டது, இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுவி முடிக்கப்படும் போது, நாட்டின் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் மின்சாரத் திறன் 700 மெகாவோட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |