முல்லைத்தீவில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - களமிறங்கும் விமானப்படை உலங்குவானூர்தி
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று கடற்றொழிலாளர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
காணாமல்போன கடற்றொழிலாளர்களை விரைவாகக் கண்டறிந்து மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் தொடர்புகொண்டு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடினார்.
இதுவரை கரைதிரும்பவில்லை
கடந்த 26.10.2026 அன்று காலை 7.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு அமைச்சர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஸ்ரீ புஷ்பராஜா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய முகம்மட் ரிஸ்வான் ஆகியோராவர்.
இவர்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளித்து, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தித் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.
சீரற்ற காலநிலை
கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகத் தேடுதல் நடவடிக்கைகளில் சவால்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், கடல் வழியான தேடுதல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக வான்வழித் தேடுதலையும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, காணாமல்போன கடற்றொழிலாளர்களைத் தேடும் பணியில் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி 28.10.2026 அன்று காலை முதல் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், காணாமல்போன கடற்றொழிலாளர்களைத் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, கடற்படை மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்குத் தேவையான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரடிக் கவனம் செலுத்தி வருகின்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |