கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்..!
பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.
இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, சந்தேகநபரான இராணுவ வீரர் குறித்த நபரை தாக்கியதுடன், நான்கு மாத கர்ப்பிணியான அவரது மனைவியின் வயிற்றிலும் பலமுறை உதைத்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படைச் சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் விசேட அறிவுறுத்தலின் பேரில் கனேமுல்ல காவல் நிலையப் பிரதான பரிசோதகர் தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
